அஞ்சுகிராமம் அக்-29
தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் மருங்கூர் சுப்பிரமனிய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் அமர்ந்திருக்கும் மலை மயில் தொகையை விரித்து படுத்திருப்பது போன்று காட்சியளிக்கிறது. சம தரை தளத்திலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் கோவில் அமைந்துள்ளது. தரையில் இருந்து உயரே கோவிலுக்கு செல்ல விசாலமான, உயரம் குறைந்த படிகளும், இருபுறமும் கைப்பிடி கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும்,கன்னியாகுமரியிலிருந்து15 கிலோமீட்டர் துரத்திலும்,தோவாளையிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சியில், குமாரபுரம் தோப்பூர் பகுதியில், முருக கடவுள் சுப்பிரமணிய சாமி என்ற திருநாமத்தோடு மும்மூர்த்திகளின் அம்சமாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்து 10 நாள் திருவிழா நடைடெறும்.1ம் திருவிழாவில் பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 4ம் திருவிழாவின் போது ஆட்டுகிடா வாகனத்தில் பவணி வருகிறார்.முருகன் கோவில்களில் ஆட்டுகிடா வாகணம் மருங்கூரில் மட்டுமே உள்ளது.6ம் திருவிழாவில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்று லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.மேலும் சூரசம்ஹாரம் முடிந்து 7ம் நாள் சண்முக நாதருக்கு சிகப்பு,வெள்ளை, பச்சை சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் உயரமான உற்சவ மூர்த்தி மருங்கூரில் தான் உள்ளது. காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும். 10ம் திருவிழாவான கடைசி நாளில் குதிரை வாகணத்தில் சுப்பிரமணிய சாமி குமாரபுரம் தோப்பூரில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் அருகில் தீர்த்தவாரி மடத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.. ஒரு சமயம் கவுதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை குமாரபுரம் தோப்பூர் வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருகிறார். இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும்.
இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். முருகன் திருத்தலங்களில் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே ஒவ்வொரு மாதமும்,கடைசி ஒடுக்கத்து வெள்ளிகிழமை மதியம் கஞ்சி வழங்கப்படுகிறது.இதில் பங்கு பெறுவது புன்னியமாக கருதப்படுகிறது.காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரையும்,
மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் இங்கு வந்து முருகரை தரிசித்து செல்கின்றனர், சித்திரை மாதம் மருங்கூர் அருகே கோழிகோட்டு பொத்தை கிராம சமூகத்தினர் சம்பிராயப்படி வள்ளி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பின்பு கோவிலில் வைத்து தாலிகட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது. சித்திரை மாதம் தைபூசத்தை முன்னிட்டு இரவிபுதூர்,மருங்கூர்,குமாரபுரம் தோப்பூர் பொதுமக்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் குடம் எடுத்துவரும் நிகழ்வும் நடைபெறுகிறது. மார்கழி மாதம் சுசீந்திரம் சஷ்டி திருவிழாவின் போது சுப்பிரமணிய சுவாமி மக்கள்மார் சந்திப்புக்காக 2ம் திருவிழா அன்று குமாரபுரம் தோப்பூர்,ஆத்தியடி,மருங்கூர் வழியாக இரவிபுதூர் பிள்ளையார் கோவிலில் தங்கி.அடுத்த நாள் இரவிபுதூரில் இருந்து நல்லூர்,அக்கறை வழியாக கற்காடு வந்தடைகிறார். அங்கு சிறப்பு பூஜைகள்,அவங்காரத்துடன் அம்மை அப்பனை சந்திக்க தாணுமாலையன் கோவில் செல்கிறார். மீதமுள்ள நாட்களில் தாணுமாலைய சுவாமியுடன் வீதி உலா வருகிறார். மக்கள்மார் பிரிந்துசெல்லும் நிகழ்வுக்கு பிறகு சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் இருந்து அக்கரை,நல்லூர்,மருங்கூர்,வழியாக குமாரபுரம் தோப்பூர் வந்தடைகிறார்.மேலும் இத்தலத்தில் பொதுமக்களின் திருமன வைபவங்கள், மொட்டை போடும் நிகழ்வுகள் அதிகளவு நடைபெறுகிறது.இங்கு நடைபெறும் காப்புகட்டு நிகழ்வு, கந்தசஷ்டிவிழா, சூரசம்ஹார விழா மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோவில்
பண்டைய காலங்களில் தர்மம்செய்வதற்காக கஞ்சிதொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அது இன்றும் கம்பீரமாக உள்ளது.