கன்னியாகுமரி அக் 12
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் நவராத்திரி விழாவின் போது பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து செல்ல யானையை அனுமதிக்காததால் கோயில் மேல்சாந்தி மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து புனிதநீர் எடுத்துவந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 48 கிராமங்களை சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் புனிதநீர் எடுத்து செல்ல பாரம்பரிய முறைப்படி யானையை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் கன்னியாகுமரி ரவுண்டானா முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து
48 கிராமங்களின் தலைவர்கள் பக்த சங்க பொறுப்பாளர்களின் கோரிக்கையினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .சேகர்பாபுவிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து, மீண்டும் யானையை வெளிமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படும் என்று திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் உறுதியளித்தார்.மேயரின் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லாத போராட்ட குழுவினர் பகவதி அம்மன் கோயில் முன்பு போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், பகவதி அம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்கு சங்கரன் கோவில் யானை வரும் என்று உறுதியளித்தார்.
ஆனால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய அறநிலையத்துறையை கண்டித்து நேற்று இரவு கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் மரத்தால் செய்யப்பட்ட யானையை செண்டை மேளம் முழங்க பக்தர்கள் எடுத்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.