சென்னை, நவம்பர்- 24, இந்தியாவின் மிகப்பெரிய மேட்ரிமோனி ( திருமண வரன் ஏற்பாடு ) சேவை வழங்குனரான மேட்ரிமோனி டாட் காம் “மெனி ஜாப்ஸ்”என்ற செயலியை அறிமுகம் செய்தது.
இச்செயலியை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி . ராஜா அறிமுகம் செய்து துவக்கி வைத்தார்.
மெனி ஜாப்ஸ் ” செயலி சேவையை தொடங்கி வைத்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:- “மெனிஜாப்ஸ் இணைய வாசல் சேவையை உருவாக்கி, அதன் வழியாக சேவையை வழங்குவதற்காக மேட்ரிமோனி டாட் காம் நிர்வாகத்தை நான் மனதாரா பாராட்டுகிறேன். புதிதாக வேலை வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் ஒரு பிரத்யேக தளமான ” மெனி ஜாப்ஸ் ” சேவை செயலி பயனுள்ளதாக விளங்கும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இச்சேவை, இதன் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. ஏனெனில், இந்த இரு மொழிகளிலும் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் நல்ல பரிச்சயம் உள்ளவர்களாக அவற்றைப் பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் திறன்மிக்க பணியாளர்கள் அதிகம் இருக்கின்ற மற்றும் தொழிலகங்களுக்கு உகந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாலும் மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாலும் இம்மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு இச்சேவை நல்ல பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
இம்மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை தேடி கண்டறியும் செயல்முறையை மேலும் எளிதாக்குவதற்கு மிகப் பொருத்தமான செயல்தளமாக இயங்க ” மெனிஜாப்ஸ் ” தளம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.
மேட்ரிமோனி டாட் காம் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் முருகவேல் ஜானகிராமன், இந்த சேவையை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:- “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு துறையில் ” மெனி ஜாப்ஸ்” என்ற செயலியை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆரம்ப நிலை வேலை வாய்ப்புகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ரீடெய்ல், விற்பனை, வாடிக்கையாளர் சேவை, உற்பத்தி, ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு தொழில் பிரிவுகளில் முன்னணி மற்றும் ஆரம்ப நிலை பணிகளை வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களோடு மெனிஜாப்ஸ் இணைந்து செயல்படுகிறது .
இச்சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, ஆறு மாத கால அளவிற்குள் வேலை வாய்ப்பை தேடும் 10 இலட்சம் நபர்களுக்கு உதவுவதை மெனிஜாப்ஸ் செயல்தளம் இலக்காக கொண்டிருக்கிறது என்றார்.