சங்கரன்கோவில்.ஜூன்.23.
இப்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. நிலையில் நேற்று சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது சங்கரன்கோவில் ராஜா எம்எல்ஏ பேசியதாவது,
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சமூக நலத்துறை மூலம் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் ,காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை சிற்றுண்டி திட்டம் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்யும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தினை கொண்டு வந்த முதல்வருக்கும், சிறப்பாக செயல்படுத்தி வரும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் ஒன்றிய பகுதிகளில் முன்பு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட குடிசை மாற்று வாரியம் தற்போது தமிழ்நாடு முதல்வரால் வாழ்விட மேம்பாடு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் தா மோ .அன்பரசன் சீரிய முயற்சியாலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது. இந்த கட்டிடங்களில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, நான்கு மூக்கு, ஊத்து மற்றும் குதிரை வெட்டி பகுதியில் பாம்பே பர்மா தேயிலை கம்பெனி என்ற நிறுவனம் சுமார் 95 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்தத் தோட்டத்தில் சுமார் 2000 தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு வசித்து தோட்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் கீழ் கொண்டு வந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும் எனவும், திமுக ஆட்சி அமைந்த உடன் சங்கரன்கோவிலில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும் எனவும், மேலும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான துறைகளை உருவாக்கி கல்லூரியை மேம்படுத்திட வேண்டும் எனவும், மேலும் திருவேங்கடம் தாலுகாவில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி கிராமப்புற மக்களின் கல்வி மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சங்கரன்கோவில் பகுதியில் இளைஞர்கள் பயன்படும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைத்திட வேண்டும் எனவும், தனியார் வசம் இருந்த மேல நீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தற்போது அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது இந்த கல்லூரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு வசதிகள் செய்யப்படாததால் அதற்காக நிதி ஒதுக்க வேண்டும் எனவும், சங்கரன்கோவில் ஒன்றியம் களப்பாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதி நகர், நேதாஜி நகர் தாசையா நகர், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று துவங்க வேண்டும் எனவும், தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி,சுயநிதிபள்ளி ,மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்ஐ பள்ளி உள்ளிட்ட சுமார் 1289 பள்ளிகள் பத்து கல்வி மாவட்டங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன.இருந்தும் ஒரே ஒரு இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமே தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 2 இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருவதைப் போல, தென்காசி மாவட்டத்திலும் சங்கரன்கோவில் மையமாகக் கொண்டு இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும், குருவி குளம் ஒன்றியம் செவல்குளம் கிராமத்தில் தற்போது புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனவம், கலைஞர் ஆட்சிக் காலத்தில் பொற்கொல்லர் நல வாரியம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது அது செயல்படவில்லை எனவே தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பொற்கொல்லர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் எனவும், அதேபோல் முன்னாள் முதல்வர் கலைஞரால் மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் முன்பு சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த ஆட்சி காலத்தில் அந்த வாரியம் செயல்படாமல் உள்ளது .எனவே தமிழக முதல்வர் மண்பாண்ட நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட புளியங்குடியில் இருந்து கழுகுமலை செல்லும் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், அதேபோல் பருவக்குடி விலக்கு , கலிங்கப்பட்டி கோவில்பட்டி வழித்தட சாலைகளை முதல்வரின் நேரடி மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்படுத்தி தர வேண்டும் எனவும், பொதுமக்களின் நலன் கருதி குருவி குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவியலர்களை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், சங்கரன்கோவிலில் இஸ்லாமியர்கள் ஜமாத் கமிட்டியின் நீண்ட நாள் கோரிக்கையான மையவாடி அமைத்து தர இடம் தேர்வு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், சங்கரன்கோவில் நகராட்சி 15 மற்றும் 16 வது வார்டு பகுதிகளில் புதுமனை 3, 4 ,5 ஆகிய தெருக்களில் சுமார் 600 குடும்பத்தினர் நில வாடகை திட்டத்தின் கீழ் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பட்டா கிடைத்திட ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும்,
சங்கரன்கோவில் பகுதியில் அதிகமான கால்நடைகள் வளர்ப்பதால் சங்கரன்கோவில் புதுமனை பகுதியில் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும், மேலும் சங்கரன்கோவிலில் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் அமைத்திட வேண்டும் எனவும், சுமார் 39 கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் பத்திர பதிவிற்கு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை நாட வேண்டியது உள்ளதால் குருவி குளத்தை மையமாகக் கொண்டு புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் எனவும், மேலும் தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்க பட்ட நிலையிலும் பத்திரப்பதிவில் பாளையங்கோட்டை பத்திர பதிவு மாவட்டம் என செயல்பட்டு வருகிறது. இதனை தென்காசி பத்திரப்பதிவு மாவட்டம் என மாற்ற வேண்டும் எனவும், சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள ரயில் இருப்புபாதை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சங்கரன்கோவில் பகுதியில் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனை தனியார் கட்டிடத்தில் இயங்கி வருவதால் இந்த மருத்துவமனைக்கு சொந்த கட்டிடம் அமைத்து தர வேண்டும், மேலும் இங்கு சித்தா மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இளையரசனேந்தல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி வருவாய் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனவும், அதேபோல திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனேந்தல் பிர்க்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனவும், மானூர் தாலுகா வெள்ளப்பனேரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் பெரிய கண்மாய் நிறைந்து வீட்டு பகுதியில் தண்ணீர் புகுந்தது. எனவே இனி வரும் காலத்தை கருத்தில் கொண்டு கண்மாயை ஆழப்படுத்தி மடைகளை சீர் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.