மதுரை, அக்டோபர் 07
மதுரை இந்திய அளவில் ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் மு. மணிவாசகம் கல்லூரிப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் இடைநிலைப் பிரிவு 6-8 ஆம் வகுப்பு மேல்நிலைப் பிரிவு 9-12 வகுப்பு கல்லூரிப் பிரிவு என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டு போட்டியில் சென்னை வேலூர் தாம்பரம் புதுச்சேரி கோவை, ஈரோடு சேலம், திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நெல்லை மற்றும் மதுரை ஆகிய 12 மண்டலங்களில் மொத்தம் 4.838 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது.
இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் இடைநிலை மேல்நிலை கல்லூரி என ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒருவர் வீதம் 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000 மும் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 7,500 -ம் மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 -ம் மற்றும் அனைவருக்கும் கோப்பையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.