மதுரை ஜனவரி 22,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழாவினை முன்னிட்டு தெப்பத்தில் முகூர்த்தக்கால் நடும் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி தை மாதத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெறும். இவ்விழாவானது ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக 12-ஆம் திருநாளாக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அடுத்த மாதம் 11.02.2025 அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான, அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்நிலையில் 30 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா தொடங்கிவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்கும் வகையில் தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் பணி தொடங்கியது. முக்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க தெப்பகுளத்தில் உள்ள தூணில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.