தென்காசி மாவட்டத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழக முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விதிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆலங்குளம் தொட்டியான் குளம் பகுதியினை நேரடியாக பார்வையிட்டும், தென்காசி சிற்றாறு பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியினையும், செங்கோட்டையிலுள்ள தஞ்சாவூர் குளத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீயணைப்பு மீட்புப் படையினர் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அரசு சார்பில் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் .ராமச்சந்திரன் தெரிவித்தார்கள்.
பின்னர் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள 77 நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த 277 நரிக்குறவர் இன மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அரிசி, பருப்பு,எண்ணெய், தட்டு, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி வட்டாட்சியர் ராம்குமார், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.