மதுரை மார்ச் 19,
மதுரையில் கோலாகலமாக நடந்த முருகப்பெருமான் பட்டாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியானது நடைபெற்றது. இத்திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன.
மாலையில் பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோயில் ஆறு கால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடி ஏந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். திருக்கல்யாணத்தை முன்னிட்டு அம்மை அப்பர் மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் காலை 5 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அருள்மிகு சுப்பிரமணியர் தெய்வயானைசேத்தியில் மணக்கோல அலங்காரத்தில் நண்பகல் 1 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து மீனாட்சி மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருக்கல்யாண வைபோகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர்.
திருக்கல்யாணத்தை கண்டு களிக்க பக்தர்களுக்காக எல் இ டி டிவி பொருத்தப்பட்டிருந்தனர். இதனை சுவாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். கோவிலில் பெண்கள் புதிதாக தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். திருக்கல்யாணத்தை முன்னிட்டு 800 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைதொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான இன்று பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற உள்ளது.