திருவாரூர்
மார்ச் 20
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 2025 மார்ச் மாதத்திற்கான முகாம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சிமிழி ஊராட்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வி தரம் குறித்து அறிய பாடபுத்தகங்களில் சில பாடங்களை வாசித்து காட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதன் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் வாசித்து காட்டினார்கள்.
சிமிழி ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். சிமிழி ஊராட்சி தலையாங்காடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், ரூ.2.67 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீட்டினையும், ஊரக வீடு சீரமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் வீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும், மஞ்சக்குடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், மஞ்சக்குடி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, துவரம்பருப்பு, சர்க்கரை, ஆயில் போன்ற பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மஞ்சக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.97 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினையும், காளியம்மன் கோவில் தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும், அன்னவாசல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பழுது நீக்க பணிகளையும், சமையல் கூடத்தில் மதிய உணவிற்காக சமைக்கப்படும் உணவின் தரம் குறித்தும், அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகள் சரியான எடை, உயரத்தில் உள்ளார்களா எனவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் வெளிநோயாளி விவர பதிவேடுகளையும், மருந்துகளின் இருப்பு விவர பதிவேடு மற்றும் மகப்பேறு பிரிவினையும் நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறித்து அறிய பாடபுத்தகங்களில் சில பாடங்களை வாசித்து காட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறியதன் அடிப்படையில் மாணவர்கள் வாசித்து காட்டினார்கள். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அறிய உணவினை ருசித்து பார்த்தார்.
குடவாசல் கிளை நூலகத்திற்கு சென்று நூலக வருகை பதிவேட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் கையொப்பமிட்டு, நூல்களை பார்வையிட்டார். குடவாசல் பகுதியிலுள்ள இ-சேவை மையத்திற்கு நேராக சென்று மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், சேவைகளை விரைவாக வழங்கிடவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.