அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்.
பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பரசனேரி ஏரி, அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஆகியவற்றை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் (04.12.2024) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பரசனேரி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் சந்திரப்பட்டி, கல்லாவி, மாரம்பட்டி, மேட்டுத்தாங்கல், மூங்கிலேரி, நொச்சிப்பட்டி, பெரியகொட்டகுளம், புதூர்புங்கனை ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 125 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், போர்வை, வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.தொடர்ந்து, கல்லாவி ஊராட்சி, துரைசாமி நகர், கோவிந்த செட்டி குமாரர் திரு.சென்னகேசவன் அவர்களுடைய குடிசை வீடு மழை காரணமாக இடிந்து பாதிப்படைந்துள்ளதை நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுக்க ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், துரைசாமி நகர் பகுதியில் மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்வான நிலையில் மின் கம்பிகள் தாழ்வாக இருப்பதை பார்வையிட்டு, உடனடியாக தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சரிசெய்து வழங்க மின்சார துறையினருக்கு உத்தரவிட்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது:
பெஞ்சல் புயலினால் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலேயே ஊத்தங்கரையில் தான் 50 செ.மீட்டர் மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் விபரங்களை தலைமையிடத்திற்கு தெரிவிக்க மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை பொறுப்பு அமைச்சராக நியமித்தார். அதன்படி, கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து, அதன் விபரங்களை தலைமையிடத்திற்கு தெரிவித்தார்கள். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைப்பதற்காக 7 முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 02.12.2024 அன்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஓசூர் மாநகராட்சியிலிருந்து 100 தூய்மை பணியாளர்கள், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களிலிருந்து 100 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 200 தூய்மை பணியாளர்களைக் கொண்டு, பாதிக்கப்பட்ட வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால், தற்போது சிங்காரப்பேட்டை சமுதாயக் கூட நிவாரண முகாம் தவிர 6 முகாம்களில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வீடுகள், குடிசை வீடுகள், பயிர்கள், கால்நடைகள் தேசமடைந்தால் அவற்றிற்கான நிவாரண உதவிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வழங்க வேண்டும் 61601 அறிவுறுத்தியுள்ளார். அதற்கான கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் துறை சார்பாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இக்குழுக்கள் கணக்கெடுப்பணியை முடித்து தலைமையிடத்திற்கு அனுப்பி அதற்கான நிவாரணத்தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அதேப்போல மாவட்ட முழுவதும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையின் சுற்றுசுவர் கட்டுவதற்கும், வீடுகள் ஏதாவது பாதிக்கப்பட்டிருந்தார் அந்த வீடுகளுக்கெல்லாம் புதியதாக வீடுகள் கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டப்பட்டு வீடுகள் பழுதடைந்திருந்தால் அதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 2 ½ இலட்சம் வீடுகள் பழுதுபார்ப்பதற்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார்கள். அதனடிப்படையில் பாதிப்படைந்த வீடுகள் சரிசெய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டாரங்களில் 13 இடங்களில் நாளை (05.12.2024) முதல் சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி
அவர்கள்
தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எஸ்.ரஜினி செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சத்தியவாணி செல்வம், வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.