சென்னை, ஆகஸ்ட் -08,
சென்னை சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சமூகநலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உடன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் என்.எழிலன், சமூகநலத்துறைச் செயலாளார் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலத்துறை ஆணையர் அழுதவல்லி, மாமன்ற உறுப்பினர் நே.சிற்றரசு, பள்ளித் தலைமையாசிரியர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் கீதாஜீவன் பள்ளி மாணவிகளிடையே பேசியதாவது:-
இன்று முதியோர்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது தலையாய கடமை. தற்போது முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. அதை குறைத்திட வேண்டும் என்று நல்ல பல திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
அதன் வழியில் முதியோர் பாதுகாப்பு நலச் சட்டத்தை சரியான முறையில் செயல்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். சிறார் திருமணங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வு அனைத்து பெண் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். சிறார் திருமணத்தை தடுக்க 1098 என்ற அவசர அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என்று பேசினார்.