அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கைப்பேசி செயலி மூலம் சட்டஉதவிகளை பெறலாம்.
அரியலூர், ஜூலை 31:
கைப்பேசி செயலி மூலம் சட்ட உதவிகளை பெறலாம் என்றார் அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமாகிய எம்.எஸ்.மணிமேகலை.
ஆள்கடத்தலுக்கு எதிரான நாளையொட்டி அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் அவர் மேலும் பேசுகையில், பல்வேறு வணிக நோக்கத்துக்காவும், கொத்தடிமையாக வேலை செய்வதற்கும் மனிதர்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். மனிதர்களை கடத்துவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மனித கடத்தல் நடப்பது தெரியவந்தால் அருகிலுள்ள காவல் நிலையங்களிலோ அல்லது சட்டப் பணிகள் ஆணைக்குழுவிலோ புகார் தெரிவிக்கலாம்.
அவர்களை மீட்டு மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொள்ளும்.
குடும்பச் சூழ்நிலை , வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரம் காரணமாக கிடைத்த வேலையை செய்வதற்காக மக்கள் புலம்பெயர்ந்து தங்களுக்கு கிடைத்த வேலையை செய்து முன்வருகின்றனர்.
அப்படி வேலை செய்யும் இடங்களில் குறித்த வேலைக்கு சரியான ஊதியம், காப்பீட்டு வசதி, தொழில் பாதுகாப்பு,
மருத்துவ சேவைகள் அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் பெறுவது தொழிலாளர்களின் உரிமை.
நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பல உண்மையான பிரச்சினைகள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய முறையான தகவல் பரிமாற்றத்தில் மாநிலங்களுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது குறித்து சட்ட உதவி மற்றும் ஆலோசனையை பெற சட்டப் பணிகள் ஆணைக்குழுவை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
15100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சஅகநஅ மொபைல் ஆப்பை பயன்படுத்தியும் பொதுமக்கள் சட்ட உதவியை பெறலாம் என்றார்.
முன்னதாக பட்டியல் வழக்குரைஞர் கமலக்கண்ணன் சட்ட விழிப்புணர்வு உரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை ராம்கோ சிமென் ஆலையின் முதுநிலை பொது மேலாளர் ஜான்சன், மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.