சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரி மற்றும் மசு பல்கலைக்கழகக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமை கணினித்துறை தலைவர் குருநாதன் தொடங்கி வைத்து தலைமையுறை ஆற்றினார். அவர் தமது உரையில் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு சட்டம் எந்த பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரி தலைமையிலான மாணவர் குழு பல்வேறு சட்டங்கள் குறித்து கருத்துரை ஆற்றியது. இக்குழுவில் இடம்பெற்ற பத்து சட்ட மாணவர்களும், சாலை பாதுகாப்பு மற்றும் விதி மீறல்கள், மனித உரிமை மீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், சைபர் குற்றங்கள், ஆன்லைன் மோசடிகள் மற்றும் உணவுப் பொருள் கலப்படங்கள் ஆகியன குறித்தும் இவற்றிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்தும் எடுத்துக் கூறினர்.
முன்னதாக முகாமிற்கு வந்திருந்தவர்களை நாட்டு நல பணித்திட்ட அதிகாரி கணபதி வரவேற்றார்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு தமிழ் துறை தலைவர் அருள் மனோகரி நன்றி கூறினார்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.