நாகர்கோவில் ஜூலை 11
குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் போன்ற நீதிமன்றங்களில் பணி புரியும் வழக்கறிஞர்கள் நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . நேற்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் நீதிமன்றம் பகுதியில் நேற்று காலை வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று கூடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் அசோக் குமார், மூத்த வழக்கறிஞர் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வழக்கறிஞர் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக வேப்பமூடு வழியாக, அண்ணா பேருந்து நிலையம் வழியாக ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வழக்கறிஞர்கள் செல்ல முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வழக்கறிஞர்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.