திண்டுக்கல் ஜூலை -11
மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த 11-8-2023 அன்று மசோதாக்கள் தாக்கல் செய்து தற்போது நடைமுறையில் உள்ள
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஎ) ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைத்து வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாஷ்யா அதிநியம் (பி.எஸ்) மாற்றி அமைத்து சட்டமாக்கப்பட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் சரத்து 348-ற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்தும் முழுமையாக திரும்ப பெற வேண்டுமென்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு(JAAC) பொதுக்குழு கூட்டம்
8-7-2024 -ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத் தீர்மானத்தின்படி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திண்டுக்கல்
மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி 9-7-2024 முதல் 12 -7 -2024 -ஆம் தேதி வரை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி,10-07-2024 -ஆம் தேதி திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று திண்டுக்கல் இரயில் முன்பாக இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றனர். அப்போது இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்பு வேலிகளை தாண்டி இரயில் நிலையத்தின் உள்ளே சென்று இரயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார் .
இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஜெயலட்சுமி மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஓட்டன்சத்திரம், நத்தம் , கொடைக்கானல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.