நாகர்கோவில் நவ 8
கன்னியாகுமரி மாவட்டதில் தனது சொத்து தொடர்பான வழக்கை நடத்திய வழக்கறிஞர் கிறிஸ்டோபர் என்பவர் எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக செயல்பட்டதால் வழக்கறிஞர் கிறிஸ்டோபரை வெட்டி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கொலையாளி வாக்குமூலம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பதி சாரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் தனது வழக்கு தொடர்பாக கிரிஸ்டோபர் சோபி(50) என்பவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட வழக்கறிஞரும் அதற்கான தொகையை பெற்று கொண்டு வழக்கை நடத்தி வந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கின் போக்கு கடந்த சில மாதங்களாக இசக்கிமுத்து சாதகமாக செல்லவில்லை. மேலும் இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிரிஸ்டோபர் சோபியிடம் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் சரியான பதிலை கூறாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து, சந்தேகமடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞர் நடவடிக்கை குறித்து ரகசியமாக விசாரணை செய்துள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவது போல் நடித்துவிட்டு தனது எதிர் தரப்பினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதை இசக்கிமுத்து கண்டுபிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை தருமாறு வழக்கறிஞரிடம் இசக்கிமுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இசக்கிமுத்து வீட்டிற்கு வழக்கறிஞர் வந்துள்ளார்.
அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்த மது போதையில் இசக்கிமுத்துவுக்கும், வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கோவத்திலிருந்த இசக்கிமுத்து தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த வழக்கறிஞர் மீது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வழக்கறிஞர் தலை, கை, கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். பின்னர் யாரும் அறியாத வண்ணம் வழக்கறிஞர் உடலை பீமநேரி அருகே உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையோரம் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நேரடியாக போலீசாரிடம் சென்று சரணடைந்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு கொலையாளியான இசக்கிமுத்துவை அழைத்து வந்த போலீசார் வழக்கறிஞரின் உடலை குளத்தின் பகுதியிலிருந்து கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சரணடைந்த கொலையாளி இசக்கிமுத்துவிடம் வழக்கின் பின்னணி என்ன, கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதா அல்லது ஆத்திரத்தில் செய்யப்பட்டதா என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.