நாகர்கோவில் ஜூலை 9
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள புது குடியிருப்பு சுப்பையா குளத்தில் குளிக்க சென்ற மதன் 42 கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுப்பையார்குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டு குளம் ஆழப் படுத்தப்பட்டது. குளம் தூர் வாரியதும் பொதுமக்கள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதித்தது முதல் இன்று வரை தொடர்ந்து நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரணங்கள் குறித்து பொதுமக்கள் கூறும்போது குளத்தின் ஆழத்தைப் பற்றி அறிவிப்பு பலகை மற்றும் போதிய பாதுகாப்பு அறிவிப்பு இல்லாததே இது போன்ற மரணங்கள் நிகழ காரணமாக உள்ளதாகவும், முதல் மரணம் பள்ளிவிளையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குளத்தின் ஆழம் தெரியாமல் நீச்சல் அடித்து குளிக்கும்போது உயிரிழந்தார். இரண்டாவது மரணம் ராமன் புதூர் பகுதியை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் விடுமுறை நாளில் குளிக்க இறங்கி குளத்தின் ஆழப் பகுதிக்கு சென்று குளிக்கும்போது உயிரிழந்தார்.
மூன்றாவது மரணம் வெளி மாநிலமான கேரளாவை சேர்ந்த நபர் குளித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு செல்ல நினைத்து குளத்தில் இறங்கி குளிக்கும்போது உயிரிழந்தார். தற்போது இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மதன் என்பவர் குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே இது போன்ற மரணங்கள் சுப்பையா குளத்தில் நிகழாமல் இருக்க பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் உள்ள படித்தறை பகுதிகளில் குறிப்பிட்ட தூரம் கம்பிகள் அமைத்து அதில் எச்சரிக்கை பலகை வைத்தால் புதிய நபர்கள் குளத்தில் இறங்கி குளிக்கும் போது அந்தக் கம்பியை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு குளிக்க ஏதுவாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இக்குளத்தில் மீண்டும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க தடுப்பு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.