நாகர்கோவில் ஜூன் 4
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வருகையால் திருவிழா போல் காட்சியளிக்கும் சுற்றுலாத்தலங்கள்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகே உள்ள திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், திரிவேணி சங்கமம், வட்டக்கோட்டை போன்றவற்றை காணவும் கடலில் படகில் பயணம் செய்யவும், உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து கன்னியாகுமரி கடலின் இயற்கை எழில் மிகு அழகை கண்டு ரசிப்பதுடன் சூரிய உதயம் மற்றும் மறைவு போன்றவற்றையும் பார்ப்பதுடன் படகு மூலம் கடலில் பயணம் செய்தும் மகிழ்கின்றனர். அதேபோல் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியில் குளித்தும் உற்சாக படகு சவாரி செய்தும் வருகின்றனர். திருப்பரப்பு அருவியில் ஏப்ரல் மே மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
இதனிடையே, கோடை மழை காரணமாக, பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது மழை தணிந்துள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் திற்பரப்பு அருவிக்கு கடந்த ஒரு வாரமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைய சில நாள்களே உள்ளதால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினம் தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.