நாகர்கோவில் அக் 10
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசாங்கம் மக்களின் வரிப்பணத்திலிருந்து அளிக்கும் சலுகைகளோடு இத்தகைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சாம்சங் தொழிற்சாலையில் சுமார் 1800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை உற்பத்தி செய்யப் படுகின்றன. இந்தியா வளம் மிக்க சந்தை என்பதாலேயே இத்தகைய பகாசுர நிறுவனங்கள் சுமார் 40,000 இந்திய மண்ணில் செயல்பட்டு வருகின்றன. சாம்சங் நிறுவனத்தின் தென்கொரிய தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 3 லட்சம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப் படுகிறது. ஆனால் இந்தியாவில் சென்னை தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 20,000, 25,000 ரூபாய் என்ற அளவில் மட்டும் சம்பளம் வழங்கப் படுகிறது. கடுமையான பணி நேரம், குறைவான ஊதியம், பாதுகாப்பற்ற பணிச் சூழல் என்ற நிலைமையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்ட சிஐடியு தொழிற்சங்கத்தை அந்த தொழிற்சாலையில் நிறுவினார்கள். மொத்தம் 1800 பேரில், 1500 பேர் சிஐடியுவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், பெரும்பான்மை ஆதரவு பெற்ற சிஐடியு தொழிற்சங்கத்தை, சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்க மறுத்துள்ளதோடு, போட்டியாக தனது கூலி சங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிஐடியுவில் இணைந்த தொழிலாளர்களை மிரட்டி வருகிறது. தொழிலாளர் நலத் துறைக்கு அளிக்கப் பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. பல முறை நடத்தப் பட்ட பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்கவில்லை. எனவே கடந்த செப்டம்பர் 9 முதல் சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆலையின் அருகில் தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறார்கள். உடன்பாட்டுக்கு முன்வராத நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்த முற்பட்ட போது சங்கத்தின் தலைவரும், சிஐடியு மாநில செயலாளருமான தோழர் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கைது செய்யப் பட்டனர். இதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தம் ஆன போது, சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் அ. சவுந்தரராஜன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். இதனை வன்மையாகக் கண்டித்து மாநிலம் முழுவதும் சிஐடியு சார்பில் கடந்த செப்டம்பர் 21 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் சாம்சங் நிர்வாகமும், தமிழக அரசும், அதன் தொழிலாளர் நலத் துறையும், காவல் துறையும், போராடும் தொழிலாளர்களை ஒடுக்க முற்பட்டுள்ளார்கள். எனவே, சிஐடியு சார்பில் அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் செய்து கைதாகினர். பின்னர், அக்டோபர் 5 அன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட போது, கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். சாம்சங் நிர்வாகத்துடனும், தொழிலாளர்களுடனும் மூன்று அமைச்சர்கள் டி. ஆர்.பி. ராஜா, தா. மோ.அன்பரசன், சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்க அங்கீகார பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதாகச் சொல்லி அரசாங்கம் தப்பிக்க முற்பட்டது. இதற்கிடையே போராடும் சங்க நிர்வாகிகளை செவ்வாயன்று இரவில் வீடுகளில் அராஜகமாகப் புகுந்து கைது செய்வதும், தர்ணா பந்தலை சிதைத்ததுமான அடாவடி நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையையும், இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கோரியும், தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலியாக செயல்படும் தமிழக அரசாங்கத்தின் ஒடுக்கு முறை நடவடிக்கைகளைக் கண்டித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் கன்னியாகுமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது .எல்.ஐ.சி., வங்கி, பி.எஸ்.என்.எல்., பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாநில அரசு ஊழியர்கள், கட்டுமானம், தையல் உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்கள் என கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக் கூடிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கூட்டுக் குழு நிர்வாகிகள் எஸ். இராமச் சந்திரன், ராதாகிருஷ்ணன், பா. ராஜூ ஆகியோர் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பென்னட் ஜோஸ்,மூட்டா அமைப்பின் தோழர் ராஜ ஜெயசேகர் , அரசு ஊழியர் சங்கம் சார்பில் தோழர் சுபின் ,
வங்கி ஊழியர்கள் சார்பில் தோழர் சாகுல் ஹமீது, ஆகியோர் ஆர்ப்பாட்ட வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் மனோகர் ஜஸ்டஸ் நிறைவுரையாற்றினார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன் நன்றி கூறினார்.