நாகர்கோவில் ஜூன் 12
கன்னியாகுமரியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜீரோ பாயிண்ட் அருகே நின்ற காரை சோதனை செய்த போது அதில் சந்தேகத்திற்கிடமாக அருவா, கத்திகள், மிளகாய்ப்பொடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. எனவே இது சம்பந்தமாக அந்த காரை ஒட்டிவந்த நபர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.
விசாரணையில் அஞ்சுகூட்டுவிளையை சார்ந்த சுபாஷ்(33) என்பவருக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் சுபாஷ், டாணு(24), மகேஷ் @ கருப்பட்டி மகேஷ்(24), அரவிந்த், அஜெய், ஸ்ரீமன், சஞ்சய் குமார் (17) ஆகியோருடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தனது மாமியாரை கடத்தி தனது பெயரில் சொத்தினை எழுதி வாங்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரோந்து வாகன பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி துரித நடவடிக்கையில் ஈடுபட்டு பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் வெகுவாக பாராட்டினார்.
மேலும் தனியார் விடுதிகளில் தங்குவதற்கு அறை கேட்டு வருபவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்த பின்னரே அவர்களை தங்கும் விடுதியில் அனுமதிக்கவேண்டும் எனவும் அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மீறினால் தனியார் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.