கன்னியாகுமரி நவ 30
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்போர் கடற்கரையோர பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி பெற்றவர்களாக, நீச்சல் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைகளை ஒட்டிய மாவட்டம் ஆகும். அஞ்சு கிராமம் தொடங்கி, கன்னியாகுமரி, குளைச்சல், கொல்லங்கோடு என வரிசையாக திருவனந்தபுரம் எல்லை வரை சுமார் 70 கிமீ தூரத்திற்கு கடற்கரைய ஒட்டிய பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கடற்கரையை ஒட்டியுள்ள காவல் நிலையங்களில் நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் அறிவித்திருந்தார்.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட கடற்கரையோர காவல் நிலைய பணிகளுக்கு 24 மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுடைய மீனவ இளைஞர்கள் குமரி மாவட்ட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வருகிற 5-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்ப மனு பெற்று கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு 7-ந் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆட்கள் தேர்வு (சரியாக காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி பெற்றவர்களாக, நீச்சல் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் (கடலோரம்) பணிபுரிய விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் தேர்வில் கலந்து கொள்ள வரும்போது மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவர் என்ற சான்று பெற்றிருக்க வேண்டும்.
உரிய மீன்வளத்துறை சான்று இல்லாவிடில் மீனவர் என்பதை உறுதி செய்யும் பொருட்டு சாதிச்சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் (கடலோரம்) பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தேர்வில் கலந்துகொள்ள வரும்போது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் கடற்கரையோர போலீஸ் படையினருடன் இணைந்து பணிபுரிய வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.