கன்னியாகுமரி மே 23
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(53). இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவி சரோஜா மருந்து வாங்க ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது அசோக்குமார் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர மறுத்த சரோஜா கணவரை கண்டித்து விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அசோக்குமார் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்து பார்த்தபோது, அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரோஜா குளச்சல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.