கொட்டாரம் நவ 26
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் அறை, பணியாளர்களின் வருகை பதிவேடு, சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் மகளிர் நலப்பிரிவு, நீரிழிவு நோய் சிகிச்சை மேற்கொள்ளும் அறை, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு, குடும்பநல சிகிச்சை பிரிவு, பிரசவ பின் கவனிப்பு அறை, தீவிர சிசு பராமரிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கொட்டாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்பதற்கு தேவையான உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 24 மணிநேரமும் செயல்படுகிறது. பேறுகால சிசிச்சைகளாகிய கர்ப்பிணி பதிவு, எடை எடுத்தல், இரத்தஅழுத்த பரிசோதனை, தடுப்பூசி சேவைகள், இரத்த பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள், இரத்த சோகைக்கான சிறப்பு சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோயாளிகளின் பரிசோதனை அட்டைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.