ஈரோடு ஆக 18
கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்த 41 புரவலர்களால் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை 1983 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு பிரைவேட் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் , கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், கொங்கு ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்சர், கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஆகிய சிறந்த 7 நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து நிறுவனங்களும், பல்வேறு துறைகளில் அடைந்த தன்னிகரற்ற சாதனைகளின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்து கொண்டு இருக்கின்றன. இந்த சாதனை மற்றும் புகழின் மூலம் இந்நிறுவனங்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க நிறுவனங்களை நடத்திக் கொண்டு வரும் அறக்கட்டளையின் நிறுவனர் தினம் கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார். சென்னை எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தின் கனரக கட்டுமானப் பிரிவின் பொது மேலாளர் சதாசிவம் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட துறைகளில் நிறுவனங்களை உயர்நிலைக்கு கொண்டு வர அறக்கட்டளை மேற்கொண்ட முயற்சிகளை விருந்தினர்கள் பாராட்டினர். மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் அறக்கட்டளை உறுப்பினர்களை அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.