குளச்சல், மார்- 4
குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழாவுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி பவனியாக செல்வார்கள். இந்த ஆண்டு காவடி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் குளச்சல் பகுதி மணவாளக்குறிச்சி, இரணியல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் காவடி கட்டி ஊர்வலமாக செல்கிறார்கள்.
வேல் காவடி, பறக்கும் காவடி, புஷ்பகாவடி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காவடிகள் சுமந்து பக்தர்கள் செல்வார்கள். மேலும் வாகனங்களிலும் பாதயாத்திரையாகவும் பக்தர் செல்கிறார்கள்.
இதில் திக்கணங்கோடு அருகே உள்ள கருக்கன்குழி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி பவனி விழா நேற்று நடந்தது. இதில் புஷ்பகாவடி, பறக்கும் காவடி மற்றும் ஆறடி வேல் அலகு குத்தியும் பக்தர்கள் புறப்பட்டனர்.
நேற்று மாலை திங்கள் நகர், இரணியல் வழியாக திருச்செந்தூருக்கு இந்த காவடிகள் சென்றடையும். இதில் இரணியல் பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக புறப்பட்டு காவடிகள் செல்வதால் இந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரணியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில பள்ளிகளிகளில் நேற்று பிற்பகல் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.