சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, நேற்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டா லின். அப்போது அவருடன் அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஎன்.நேரு போன்றோரும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற திமுக எம்பிக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, காலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதி திருஉருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னரே, மெரினா நினைவிடத்துக்குச் சென்றார். தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் ‘தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் – 2024’ என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டபுத்தகத்தை
அவரின் அண்ணனும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து பெற்றுக்கொண்டார்.
டெல்லியில் சோனியா காந்தி மரியாதை:
டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழாவின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்பி திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர்.