கன்னியாகுமாரி ஜன 2
கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் இதன் வெள்ளி விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விவேகானந்தர் பாறை – வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை நடைபாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டத்தின் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், வள்ளுவர் சிலைகள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட உள்ள வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்வர் வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது வள்ளுவர் சிலை வெள்ளி விழா, கண்ணாடி இழை பாலம் திறப்பு விழா, வெள்ளி விழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி தொடக்கம், வள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் என ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. கடந்த 2000-ல் இந்த சிலையை திறக்கும் பொத்தானை அழுத்தியபோது, தனது உடல் நடுங்கியது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அந்த அளவுக்கு உணர்ச்சி பெருக்கத்தில் அவர் இருந்தார். வெள்ளி விழாவில் அதே பெருமை நமக்கும் கிடைத்துள்ளது.
இது மட்டுமின்றி, வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றுள்ள கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அவர் கூறினார். இதனால் பேரூராட்சியாக இருந்த கன்னியாகுமரி தற்போது நகராட்சியாக உயர்வு பெற்றுள்ளது.