ஆரல்வாய்மொழி ஏப் 24
நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு நாகர்கோவில் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் மற்றும் கன்னியாகுமரியினை தலைமையிடமாகக் கொண்டு அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டம் செயல்பட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகமானது, கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் தற்போது செயல்பட்டு வருகிறது.
அகஸ்தீஸ்வரம் வட்டமானது, நாகர்கோவில் (முழுவதும்), கன்னியாகுமரி (பகுதியாக) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. தேவைகளையும், குறைகளையும், அரசு திட்ட பயன்களையும், விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தற்போது அகஸ்தீஸ்வரம் வட்டத்தினை இரு வட்டங்களாக பிரிப்பது மிக முக்கியமானதாகும்.
தற்போதைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் இருந்து நாகர்கோவில், இராஜாக்கமங்கலம் ஆகிய குறு வட்டங்களுடன் கூடிய 25 கிராமங்களை சேர்த்து புதிதாக ஒரு வட்டத்தினை நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு நாகர்கோவில் வட்டம் என்ற பெயரில் உருவாக்கினால் மக்கள் சிரமமமின்றி விரைவாக அரசின் திட்டங்களையும், பல்வேறு துறை சார்ந்த சான்றிதழ்களையும் பெற்று மக்கள் பயன் பெற முடியும்.
இதைப்போன்று முக்கடலும், சங்கமிக்கும் உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகினை பார்த்து மகிழ்ந்து செல்லும் சிறப்புக்குரிய கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு அகஸ்தீஸ்வரம் வட்டத்தை உருவாக்கலாம். பொது மக்களின் நலன் கருதி திட்டப் பயண்கள் மக்களுக்கு விரைவாக கிடைத்திடவும், வருவாய் சான்றிதழ்கள் சிரமமின்றி மக்கள் பெற்றிடவும், மேற்குறிப்பிட்ட படி அகஸ்தீஸ்வரம் வட்டத்தினை இரண்டாக பிரித்து நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு நாகர்கோவில் வட்டத்தினையும், கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு அகஸ்தீஸ்வரம் வட்டத்தினையும் உருவாக்கி தந்து, மக்களின் துயர் களைய உதவிடுமாறு கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.