நாகர்கோவில், ஜூலை – 15,
நாகர்கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நாகராஜா திடலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்த வருகை தர வேண்டுமென விஜய்வசந்த் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வளர்ச்சி திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்து, தமிழகம் இன்று இந்தியாவில் மிக சிறந்த மாநிலமாக விளங்குவதற்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி இன்றும் ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டு, பசி மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்க கூடாது என அவர்களுக்கு பள்ளிகூடத்தில் உணவளித்து கல்வியை தந்தவர் கல்வி கண் திறந்த நமது கர்மவீரர். அத்தகைய பெருந்தலைவரின் 122 வது பிறந்த நாள் இன்று. இந்த பிறந்த தினத்தை பெருமையுடன் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கன்னியாகுமரி மாவட்டத்தை தேர்வு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் கர்மவீரருக்கும் இருக்கும் நீங்கா நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. அவரை நமது நாடாளுமன்ற உறுப்பினராக கிடைக்க பெற்றது நமது பாக்கியம், இன்று மாலை 5 மணி அளவில் பெருந்தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாபெரும் பொது கூட்டம் நடைபெறுகிறது. நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் இந்த பொது கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜேஷ்குமார்
தலைமை தாங்க, எனது மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், டாக்டர்.தாரகை கத்பர்ட், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.டி.உதயம், பினுலால்சிங், நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள்
கே.வி.தங்கபாலு. கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். மேலும் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர்
புகழ் பாடும் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு குமரி மண்ணிற்கு பெருமை சேர்க்க அன்புடன் கேட்டு கொள்கிறேன்