மதுரை மே 27,
மதுரையில் ஜூன் 12 மீனாட்சியம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற ஜூன் 12ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் இணையான கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள் தோறும் சாயரட்சை பூஜைக்கு பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளாக சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் உள்ள 100 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருள்வர்.
இதையடுத்து மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசக திருப் பொன்னூஞ்சல் பதிகம் ஓதப்படும். நாகசுரக் கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இந்தப் பதிகங்களை இசைத்த பின்னர் மகா தீபாராதனை நடைபெறும். முப்பழ அபிஷேகம் ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஒவ்வொரு வகையான திரவியங்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆகமத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆனி மாத பௌர்ணமி நாளின் (ஜூன் 21) உச்சிகால வேளையின் போது மூலவர் சொக்கநாதப் பெருமானுக்கு மா,பாலா, வாழை ஆகிய முக்கனிகளின் சாறை கொண்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஊஞ்சல் உற்சவ நாளில் உபய திருக்கல்யாணம் தங்க ரத உலா ஆகியன நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.