குளச்சல், டிச-1
குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சேர்ந்த மீன் பிடி தொழிலாளிக்கு 18, 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து இரண்டாவது மகள் படுத்திருந்த அறைக்கு சென்று அந்த இளம் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார். அந்த பெண் சத்தமிட்டதும், மிரட்டி விட்டு அங்கிருந்த அவரது செல்ஃபோனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த நபர் செல்போனில் எடுத்த அந்த ஆபாச படத்தை வாட்சப். மூலம் பெண்ணின் தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 28ஆம் தேதி நள்ளிரவு கொட்டில்பாடு பகுதியில் சிலுவைப் பிள்ளை என்பவரது வீட்டில் விலை உயர்ந்த செல்போனை திருடப்பட்டது. அதே நாளில் எஸ்ஸலின் என்பவரது வீட்டிலும் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டது. இது குறித்து தனித்தனியாக குளச்சல் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக கீழ முட்டத்தை சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.