நாகர்கோவில் – ஆக – 08,
கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளருக்கே தெரியாமல் அவரின் லாக்-இன் ஐடி- யை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பெண் சார் பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
முறைகேடாகவும் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்பட 5 பேர் சிக்கியது எப்படி.
கடந்த காலங்களில் உள்ளது போல் விதிகளை மீறி நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது. அதேபோல் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திர செய்ய சார் பதிவாளர்களால் முடியாது. அப்படி யாராவது அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு செய்யும் சார் பதிவாளர்கள் கண்டிப்பாக சிறை செல்வது உறுதியாகும்.எனவே தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நிலங்களைத்தான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதேநேரம் இன்னமும் சிலர் அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத விவசாய நிலங்கள், பாதை வசதி இல்லாத நிலங்கள், வீட்டு மனைகள் போன்றவற்றை சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் உள்ளது. அப்படி ஒரு புகார் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் 10 மாதங்களுக்கு முன்பு முறைகேடாக பத்திரப்பதிவு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக பணியாற்றியவர் மேகலிங்கம். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 நாள் விடுப்பில் சென்றிருக்கிறார். அவர் அப்படி விடுப்பு எடுப்பதற்கு முதல் நாள் மாலை வரை பணியில் இருந்தார்.
மாலையில் பணி முடிந்து இவர் வீட்டுக்குச் சென்ற பிறகு சுப்புலட்சுமி (வயது 33) என்பவர் மாலையில் இருந்து இரவு வரை தோவாளை பொறுப்பு சார் பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் . அவர் அன்றைய தினத்திலேயே தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மேகலிங்கத்தால் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்த பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தாராம். அவ்வாறு முறைகேடாக 25-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது தெரிவந்தது.
இதையடுத்து 2 நாட்கள் விடுப்பு முடிந்து பணிக்கு வந்த தோவாளை சார் பதிவாளர் மேகலிங்கம் தான் விடுப்பில் சென்ற தினத்துக்கு முந்தைய நாளில், அதாவது தனது பணி நாளிலேயே நிலுவையில் வைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, எஸ்பி சுந்தரவதனம் உத்தவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சொரூபராணி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனீப் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் விடுப்புக்கு முந்தைய நாளான, மேகலிங்கம் பணியாற்றிய நாளிலேயே 25-க்கும் மேற்பட்ட பத்திரங்களை சுப்புலட்சுமி முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த தனராஜா (50), தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நம்பிராஜன், டெல்பின், இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக
பணியாற்றி வரும் ஜெயின் ஷைலா ஆகியோர் இந்த வேலைகளை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பெண் அதிகாரி சுப்புலட்சுமி உள்பட 5 பேரையும் நேற்று மாலையில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் இரண்டில் நீதிபதி தாயுமானவன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, இடலாக்குடி சார்பதிவாளர் அலவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் முத்துசங்கர், காவலராக வேலை செய்து வருகிறார். கைதான சாா் பதிவாளர் சுப்புலட்சுமி 6 மாத கர்ப்பிணி ஆவார். இதற்காக அவர் காலையிலும், மாலையிலும் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 4 பேரில் நம்பி ராஜனும், டெல்பினும் நாகர்கோவில் சிறையிலும், 2 பெண்கள் தக்கலை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள்.