கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இணைந்ததின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்
பயனாளிகளுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகள், சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய 4 மருத்துவமனைகள், 4 காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், 2 வார்டு மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைகள் பெற்ற 3 பயனாளிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் முத்தமிழ் அறிஞர்
டாக்டர்.கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம
மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் ஒருங்கினைந்து 23.09.2018 முதல் சிறந்த
முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு
ரூ.5 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 1513 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய்
பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை
சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைபடுத்தப்பட்ட சிகிச்சைகள்
அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்
அனைத்திலும் அளிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாத் திட்டத்தின் மூலம்
7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 27 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு
மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 4,45,021 காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 2023 -2024 ஆம் ஆண்டிற்கு மட்டும் 6495 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 57,591 நபர்களுக்கு ரூ.89 கோடியே 49 இலட்சம் மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.1,20,000 மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (ரூ.1,20,000/- மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அறை எண்.32 -ல் செயல்படும் மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் காது வாய் நுண்கருவி சிகிச்சை பெற்று குணமடைந்த மாஸ்டர் திரிஷித், ரூ.80,600 மதிப்பில் இடுப்புமாற்று அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த .கௌரி, ரூ.68,300 மதிப்பில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த .செந்தியம்மா ஆகிய 3 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளும்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாக
சேர்க்கப்பட்ட 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு
அட்டைகளையும், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக மருத்துவ
சிகிச்சை வழங்கிய தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகள், ஓசூர்
எஸ்டி பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை, ஸ்ரீ சந்திரசேகரா
மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகள், 4 காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், 2 வார்டு
மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், முதலமைச்சரின்
விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.ஆ.தர்மர், மாவட்ட திட்ட
அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) .ராஜேஸ் மற்றும்
துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.