அரியலூர், ஜூன்:20
அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் வட்டம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பார்வையிட்டு அலுவலர்களின் பணிகள், பதிவேடுகள் விவரம், திட்டங்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்ததுடன், பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ள பதிவறையினையும் பார்வையிட்டு கோப்புகள் உரியவாறு பராமரிக்கபடுகிறதா என்பது குறித்தும் ஆய்வுசெய்தார். தொடர்ந்து ஆண்டிமடத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமில் வழங்கப்படவுள்ள சேவைகள் குறித்தும், மேலும், அடையாள அட்டைகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், அவ்வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் கிடங்கினை ஆய்வு செய்து இருப்பில் உள்ள தானிய விதைகள் குறித்தும், இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அளவுகள் குறித்தும், மேலும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கோப்புகளை பார்வையிட்டு இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் வழங்கினார்.
தொடர்ந்து ஆண்டிமடம் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆதார் சேவையினை கேட்டறிந்ததுடன், பதிவு செய்யபட்டுள்ள மனுக்கள் குறித்தும், பதிவு செய்யும் முறை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை பார்வையிட்டு பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், கூட்டுறவு துறையின் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.6,50,000 மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள், 04 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், 03 பயனாளிகளுக்கு ரூ.4,24,020 மதிப்பில் விவசாய பயிர் கடனுதவிகள், 03 பயனாளிகளுக்கு ரூ.1,80,000 மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகள் என மொத்தம் ரூ.12,54,020 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து ஆண்டிமடம் நியாய விலை கடையினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு நிலை, மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பதிவேடுகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ததுடன், பொருட்களை தாமதமின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறத்தினார். பின்னர், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்ததுடன், சிசிடிவி கண்காணிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடியதுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு செயல்பட வேண்டும் என மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தினார். மாணவிகளுக்கு கூடுதல் கழிவறைகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சத்துணவு கூடத்தினையும் பார்வையிட்டு பொருட்களின் இருப்பு நிலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஆண்டிமடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பார்வையிட்டு பதிவேடுகள், ஊரக வளர்ச்சி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு விவரங்கள் குறித்த ஆய்வு செய்தார். பின்னர், ஆண்டிமடம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினை பார்வையிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கோப்புகளில் சிட்டா பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், பூவாணிபட்டு ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு வகுப்பறைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள் ஆகியவற்றை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பூவாணிபட்டு கிராமத்தில் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் அங்கன்வாடி மைய கட்டட பணிகளை பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், பணிகள் முடிவுறும் காலம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, அணிகுதிச்சான் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்தும், சத்துணவு கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சமையல் பொருட்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முன்னர் காலாவதியாகும் நாளினை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும், மாணக்கர்களுக்கு உரிய நேரத்தில் உணவு தயாரித்து வழங்கிட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
பின்னர், பூவாணிபட்டு ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியினை பார்வையிட்டு பதிவேடுகள், விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பூவாணிபட்டு கிராமத்தில் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி செயலக கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அணிகுதிச்சான் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள், சிகிச்சைக்கு வருகைபுரிந்த நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது.
இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.