கோவை மாவட்டம் காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் அறங்காவலர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். சி.என்.ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனரும், மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் செயலருமான சொல்லின் செல்வர் சிந்தனைக் கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், “ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்த கல்வி. வாழ்க்கையில் நமக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு
உழைத்தோமென்றால் வெற்றி நிச்சயம். கல்லூரி நாட்களில் நல்ல நட்பு அவசியம். உப்பில்லாமல் கூட வாழலாம் நல்ல நட்பில்லாமல் வாழ முடியாது. கல்லூரி நட்பு மட்டுமே கல்லறை வரை வரும். நமக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. வாய்ப்புகள் நம்மை தேடி வராது. அதை நாம் தான் தேடிப் பெற வேண்டும். சிறந்த புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடப்பதோடு நீங்கள் கற்ற கல்வியினால் பெற்றோர்களை காத்து நிற்பது உங்கள் கடமையாகும். கற்ற கல்விஉங்கள் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் உயர்த்தும். உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தாழ்வுமனப்பான்மை என்பது கூடாது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு. பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். வாழ்க்கையை மாற்றும் ஒரே ஒரு ஆயுதம் கல்வி” என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்
நுட்பவியல் துறை மாணவி செல்வி.ஷாலினி பிரியா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கல்லூரியின் நிர்வாக மேலாளர் அவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.