கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரம் ஊராட்சியில் சத்ரிய நாடார் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்!
ராமநாதபுரம், ஜுலை 16-
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரகப்பகுதிகளுக்கான அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்ததை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்:
காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது தான் முதன் முதலாக மதிய உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். அன்றைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி இருந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்த நிலையை கண்ட முதலமைச்சர் காமராஜர் பிள்ளைகள் பள்ளிக்கு வராததன் காரணம் கண்டு அவர்களுக்கு மதிய உணவு வழங்கினால் ஆர்வமுடன் வருவார்கள் என்பதை உணர்ந்து மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டதுடன் ஏராளமான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியதால் இவரை கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அழைக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக திகழ்ந்தவர் ஆவார்.
அதேபோல் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெற்றோர்கள் பணிக்கு செல்வதால் எண்ணற்ற குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை உணர்ந்து மகத்தான இத்திட்டத்தை வழங்கி உள்ளார்கள். இத்திட்டம் முதலில் நகராட்சி பகுதிகளிலும் அதனை தொடர்ந்து ஊராட்சி பகுதிகளிலும் அரசு பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தன. தற்போது அரசு உதவி பெறும் பள்ளியிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கன்னிராஜபுரம் சத்ரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 7884 மாணவிகள் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, திட்ட இயக்குனர் ( மகளிர் திட்டம்), சையித் சுலைமான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கேத்ரின், கடலாடி பிடிஓ க்கள் ஜெய் ஆனந்த், முரளிதரன், கடலாடி தாசில்தார் முருகேஷ், பள்ளி செயலாளர் தமிழ் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.