நாகர்கோவில் ஆக 23
இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 21-ம் தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் அன்றைய தினம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். 22 ம் தேதி காலை நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:- புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி இந்தியா முக்கிய இடத்தில் வளர்ச்சி பெற்று உள்ளது. கடந்த 2014 வது ஆண்டு 11 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி உள்ளது. வரும் 2027 ம் ஆண்டு இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். வரும் நூறாவது சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியா உலகில் முதல் நாடாக திகழும். அதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஷார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது . கல்விக்கு மட்டும் இந்தியா ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் உயர் கல்விக்கு மட்டும் 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் எம்பிபிஎஸ் சீட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 10,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வந்தே பாரத் ரயில் ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் தற்போது இந்தியாவிலேயே முழுக்க முழுக்க வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இவையெல்லாம் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:- பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே பி நட்டா உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசின் கையில் உள்ளது. நமக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.எல்லை தாண்டி செல்லும் தமிழகப் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்ததே பாஜக தான். இந்தியா ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டு மென்றாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு நான்கு மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்தார்.