தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இருந்து முதல்வர் மருந்தகத்தினை காணொளி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைத்துள்ளார் கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயர் மருந்துகளையும் (ஜெனரிக்), பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்கள். இத்திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் மருந்தாளுனர்களுக்கு ரூ.3 இலட்சமும், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியத்தொகை ரூ.2 இலட்சமும் வழங்கப்படும். அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படும். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 18 தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட உரிய பயிற்சி மற்றும் தமிழக அரசின் மூலம் மானிய உதவித்தொகை வழங்கப்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் நடத்திட உரிமம் பெற்ற 31 முதல்வர் மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்- சேர்ந்தமரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருவேங்கடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம், கடையநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சாம்பர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சிவகிரி கூட்டுறவு பண்டக சாலை, இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பண்பொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தென்காசி கூட்டுறவு விற்பனை சங்கம், இராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புளியங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தொழில் முனைவோர்களின் மருந்தகங்கள் – வீரகேரளம்புதூர், புளியரை, வல்லம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், மாயமன்குறிச்சி,சிவகிரி, சுரண்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மருந்தகம் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் ஜெனரிக் மருந்துகள், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்காஸ், யூனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ்(Surgicals) நியூட்ராசூட்டிக்கல்ஸ்(Neutraceuticals.) ஆகியவற்றை மற்ற மருந்தகங்களை விட 25% தள்ளுபடி விலையில் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைப்பதிவாளர்கள் தொல்காப்பியன், பூர்விசா, கோபிநாத், மேலாண்மை இயக்குநர் ராஜ், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மாரியப்பன், துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.