ராமநாதபுரம், செப்.10-
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அர்ச்சுந்தன் வயல் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் முதல் முறையாக புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்தக் கட்டடம் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுமார் 20 பேர் கட்டுமானத்திற்கான முறையான பயிற்சி பெற்று அதன் அடிப்படையில் அவர்கள் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு அங்கன்வாடி மைய கட்டடம் தற்போது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக மகளிர் குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து இக்குழு உறுப்பினர்கள் மேலும் மகளிர் கூட்டமைப்புக்குழு அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள் என அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவரும் மகளிர் குழு தலைவியுமான சசிகலா லிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கரு மாணிக்கம் (திருவாடானை), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.