நாகர்கோவில் ஆக 18
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞா் அணி சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு பேச்சுப் போட்டி, கலைஞா் நூலகம் இன்று திறப்பு விழா (ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற உள்ளது.
இதுகுறித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டை விழா நிறைவையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், இளைஞா் அணி செயலரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில், ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
பேச்சுப் போட்டி இன்று காலை 9 மணிக்கு நாகா்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இதில், நான், குமரி மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மனோ தங்கராஜ், மாநில இளைஞா் அணி துணைச் செயலா் இன்பா ஏ.என். ரகு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கிறோம்.
பேச்சுப்போட்டி நடுவா்களாக டி.செங்குட்டுவன், பொள்ளாச்சி உமாபதி, வழக்குரைஞா் தமிழன் பிரசன்னா, சூா்யா சேவியா், அமுதரசன், நீரை மகேந்திரன் ஆகியோா் பணியாற்றுவா்.
மேலும், பேரவைத் தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற வகையில் நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கலைஞா் நூலகத்தை ராமன்புதூா் சந்திப்பில் மாலை 5 மணிக்கு இன்பா ஏ.என். ரகு திறந்து வைக்கிறாா். குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்கான நூலகத்தினை வெள்ளிச்சந்தை சந்திப்பில் மாலை 5.30 மணிக்கு நான் திறந்து வைக்கிறேன்.
எனவே பேச்சுப் போட்டி மற்றும் கலைஞா் நூலகம் திறப்பு விழாவில், கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.