தேனி.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு போடிமெட்டு, மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மரம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவ்வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.