அரியலூர், ஆக:05
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் நேற்று (04.08.2024) வருகைபுரிந்த 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டடம் / சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்ட பயணமாக, தென் ஆப்ரிக்கா, உகாண்டா. குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ். ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் 1.08.2024 அன்று முதல் 15.08.2024 வரையில் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் துணிமணிகள், பயண குறிப்புகள். புத்தகங்கள், அடையாள அட்டை போன்ற பயணத்திற்கான பொருட்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் பயணத்தினை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிந்த 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் மற்றும் மாமன்னன் இராஜேந்திரசோழனின் வரலாறுகளும், அதன் சிறப்புகளும் மற்றும் கலாச்சார பெருமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஷீஜா, மாவட்ட சுற்றுலா அலுவலர் தஞ்சாவூர் / அரியலூர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், வட்டாட்சியர் ஜெயங்கொண்டம் சம்பத்குமார், மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்