சுசீந்திரம் நவ 7
ஈத்தாமொழி அருகே உள்ளது அத்திக்கடை சம்பக்குளம் கால்வாய், இந்த கால்வாயை தூர்வாரி தண்ணீர் திறந்து விட வேண்டும். குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதனை வலியுறுத்தி மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். மிக்கேல் நாயகி, பபிதா, சொர்ணம்பிள்ளை, சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவகோபன், குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெகுபதி, பெருமாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
பின்னர் இது பற்றிய தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் மற்றும் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினர். பின்னல் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள், 36 ஆண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்து முகிலன்விளையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் நீர் நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் சம்பக் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை அத்திக்கடை சானலை தூர்வாரி முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணமாகும். இதனால் ஏராளமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் கேன் தண்ணீர் வாங்கி உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக அத்திக்கடை கால்வாயை தூர்வாரி சம்பக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றனர்.