எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம், நவ.22-
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், நகராட்சி கமிஷனர் உடன் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக நகராட்சியில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு மழை தீவிரம் அடைந்து கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக விடாமல் மழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வெளியூர் சென்று இருந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் தொகுதியில் மழை இரண்டு நாட்கள் விடாமல் பெய்து வருவதை கேட்டு உடனடியாக அவரது வெளியூர் பணியை ரத்து செய்து விட்டு நேற்று முன்தினம் விரைந்து இராமநாதபுரம் வந்து சேர்ந்தார். இரவில் வந்து சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இரவு ராமநாதபுரம் நகரில் தங்கி அதிகாரிகள், ராமநாதபுரம் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் கமிஷனர்கள் மற்றும் மீட்பு பணி அலுவலர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பணிகளை முடுக்கி விட்டார். பின்னர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஒரு அவசர கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பினார்.
நேற்று காலை 6 மணி முதல் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு பின்னர் நகராட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு ஆலோசனை கூட்டத்தை எம்எல்ஏ நடத்தினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது அதை வெளியேற்ற இடையூறு இருந்தது. இதை அறிந்து நேற்றைய தினம் நம்முடைய நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர்மன்ற தலைவர் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து இன்று ஒரு குறுகிய கால நேரத்தில் ஒரு அவசர கூட்டத்தை நகராட்சி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் சேர்மன் துணை சேர்மன், கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில், மின் மோட்டார் மூலமாகவும் ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள் மூலமாக தண்ணீரை அப்புறப்படுத்தி அருகாமையில் உள்ள நீர் நிலை ஊரணிகளில் விடுவதற்கான முன்னேற்பாடு பணிகளுக்கான வேலைகளை செய்வது குறித்து கலந்து ஆலோசித்தோம். நமது ஆட்சி தலைவர் துரித நடவடிக்கை எடுத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். கூட்டத்திற்கு பின்னர் தற்போது ராமநாதபுரம் நகராட்சியில் தங்கப்பா நகரில் தேங்கி உள்ள நீரை அகற்றும் பணியை நானும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் நகராட்சி சேர்மன் கார்மேகம் துணை சேர்மன் பிரவீன் தங்கம் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கூறி உள்ளோம். நகராட்சி பகுதியில்
மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு 04567-220554 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.