ராமநாதபுரம், டிச.31-
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் சங்கத்தினரை கிரிக்கெட் விளையாட அனுமதி மறுப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, இன்று மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றனர்.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பல்வேறு தொடர் கிரிக்கெட் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்ட விளையாட்டு அலுவலராக இருக்கக்கூடிய தினேஷ் அவர்கள் கிரிக்கெட் போட்டி விளையாட விடாமல் தடுத்து வருவதாகவும், சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்பதாக புகார் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) இருந்தது. இதனை தற்போதைய மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் அவர்கள் இங்கு கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் இல்லை என்று கூறிவிட்டு ராமநாதபுரத்திலிருந்து கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) யை ரத்து செய்துவிட்டார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய கிரிக்கெட் வீரர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல் விளையாட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு லீக் போட்டிக்கு 4500 வீதம் சட்ட விரோதமாக பணம் கேட்பதாகவும், இங்கிருந்து ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.