நாகர்கோவில் – அக்- 17,
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம் – ராட்சத அலைகள் பகலில் ஊருக்குள் புகுந்து வருவதால் மீனவ மக்கள் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தங்கி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் அரபிக் கடலோரப் பகுதி ஒட்டிய கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் திடீரென அழிக்கால் பிள்ளை தோப்பு போன்ற பகுதிகளில் மீனவர் குடியிருப்பு பகுதிகளை கடல் நீர் சூழ்ந்துள்ளது இதன் காரணமாக அழிக்கால் மற்றும் பிள்ளை தோப்பு மீனவ கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளதோடு கடல் நீருடன் கடல் மணலும் இழுத்துவரப்பட்டதால் அப்பகுதி புதைந்து காணப்படுகிறது. அதே போன்று சுற்றுலாத்தலமான லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக லெமூர் கடற்கரையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் கடைகள் பெரும்பாலும் அடித்துச் செல்லப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்து காணப்படுவதால் மீனவ கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது . மேலும் அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதில் குழந்தைகள் உட்பட 107 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது . மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கடல்நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடல்சீற்றம் ஏற்ப்பட்ட பகுதிகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் பார்வையிட்டு.அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு ஊர் திருமண மண்டபங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மற்றும் பெட்ஷீட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் நிதி மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் பாதிப்புகளை அலைப்பேசி வாயிலாக தெரிவித்து.நிரந்தர தீர்வாக 200 மீட்டர் தூர தூண்டில் வளைவு கட்டி தர கோரிக்கை வைத்தார்.உடன் இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன்,கணபதிபுரம் பேரூர் செயலாளர் பிரபா எழில் ,மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் ஊர் அருட்தந்தையர்கள் , மீன்வளத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.