அரியலூர், செப்:10
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைகான ஆணையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
நான் முதல்வன் உயர்வுக்குப் படி திட்டமானது தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் உன்னதமான ஒரு திட்டமாகும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சமூக, பொருளாதார சூழலின் காரணமாகவோ, குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி சேராத மாணவர்களை கண்டறிந்து அச்சூழலை நீக்கி அவர்களை உயர்கல்வியில் சேர வைக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அவர்களையும் உயர்கல்வியில் சேர வைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். மேலும், மாணவர்களின் விருப்பதிற்கேற்ப திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சிப்பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் குறித்த பட்டியல் கல்வித்துறையின் மூலம் பெறப்பட்டு, அவர்களை உயர்கல்வியில் சேர வைப்பதற்கான பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும், அதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்களும், அதேபோன்று வருவாய் கோட்டாட்சியர்கள் அளவிலான உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டும், தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலாத மாணவர்களை பட்டியலில் உள்ள முகவரிகளை கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் மாணவர்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று இச்சிறப்பு முகாம்களுக்கு கலந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர முடியாமல் ஏற்பட்டுள்ள தடைகள் தற்காலிகமானது. அதனை தவிர்த்து உயர்கல்வி பயிலவேண்டும். கல்வியே சிறந்த முன்னேற்றத்திற்கான வழியாகும். பெற்றோர்கள் பொருளாதார சூழ்நிலையின் காரணங்களுக்காக மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்காமல் இருக்கக்கூடாது. கல்வியின் மூலமாகத்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். கல்வி என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கருத்திற்கொண்டு இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலியிட விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் மூலம் சான்றிதழ்கள் தேவை இருப்பின் அதனை உடனடியாக வழங்கிட ஏதுவாக இ-சேவை மையங்களும் அமைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதேபோன்று கல்வி கடனுதவிகள் வழங்கிடும் பொருட்டு பல்வேறு வங்கிகளும் வருகை புரிந்துள்ளனர். காலியிடங்களுக்கு ஏற்ப சேர்க்கை நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆகிய வருவாய் கோட்டங்களில் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள முடியாத மாணவர்கள் இரண்டாவது முகாம்களில் கலந்துகொண்டு உயர்கல்வியில் சேர வேண்;டும்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சமூக, பொருளாதார சூழல் உள்ளிட்ட எவ்வித காரணங்களுக்காகவும் மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருக்கும் நிலை உருவாககூடாது என தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய சிறப்பான திட்டங்களை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கி படிப்பதற்கான விடுதி வசதிகளும் வழங்கப்படுகிறது. மேலும், உயர்கல்வியில் சேராத மாணவர்கள் இம்முகாம்களினை பயன்படுத்தி உயர்கல்வியில் சேரும் வகையில் மாணவர்கள் சேர்க்கையானது 15 நாட்களுக்கு தமிழ்நாடு அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர்கல்வி சேர்கை, கல்விக் கடனுதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதுகுறித்த தகவல்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து கல்வி பயின்று, வாழ்கையில் நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பேசினார்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் உள்ளிட்ட துறைகளின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு தகவல் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யுமிடம், சான்றிதழ்கள் வழங்குவதற்கான இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.
இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கு 16 மாணாக்கர்களும், நர்சிங் கல்வி பயில்வதற்கு ஒருவரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அரியலூர் ராமகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குநர் திரு.செல்வம் முத்துசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்