கருங்கல், ஏப்- 14
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நடைபெற்ற குருத்தோலை பவனி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் அமர்த்தி ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தி சிறுவர், சிறுமியரும் பெரியோர்களும் பவனியாக தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்” என்று ஆர்ப்பரித்து வந்தனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், குருத்தோலை பவனி நடத்தப்படுகிறது.
குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள மாத்திரவிளை மறை வட்ட முதன்மை ஆலயமான மிகவும் புகழ்பெற்ற மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத்தில், ஆலயம், மற்றும் தெருக்கள் குருத்தோலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இன்று காலை மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத்தில் பங்கு அருட்தந்தை கலிஸ்டஸ் அவர்கள் தலைமையில் இணை பங்கு தந்தை அனிஸ், முன்னிலையில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாத்திரவிளை மற்றும் கிளை பங்குகளின் இறை மக்கள் குழந்தைகள், ஆண்கள்,பெண்கள் மற்றும் பக்தர்கள் என அனைவரும் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்றனர். இதில் மானான்விளை, திக்கணங்கோடு, அருளானந்தபுரம், அன்னைநகர் ஆகிய கிளை பங்குகளின் மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி முடிந்த பின்னர் கலந்து கொண்ட இறை மக்கள் மற்றும் பக்தர்களுக்கு கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.