நாகர்கோவில் அக் 25
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தானத்திற்கு 30 வயதில் சுபாஷ் என்ற மகனும், 25 வயதில் சுந்தர் என்ற மகனும் உள்ளனர். இதில் சுபாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கோதை கிராமத்தை சேர்ந்த அபிநயா (22) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சுபாஷ் தன்னுடைய மனைவியுடன், பெற்றோர் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்திருக்கிறார்.சுபாஷ் தினமும் இரவில் மதுக்குடித்து விட்டு வந்து தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சுபாஷ் மதுபோதையில் அவருடைய அம்மா சுப்புலட்சுமியிடம் தகராறு செய்தாராம். அத்துடன் அவரை தாக்கிக் கொண்டிருந்தாராம். இதை தடுக்க வந்த மனைவி அபிநயாவுக்கும் அடி விழுந்தது. போதை தலைக்கேறிய நிலையில், சுபாஷ் கையில் கத்தியை வைத்துக்கொண்டு வீட்டில் உள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருந்தாராம்.
இதை பாா்த்த சுபாஷின் தம்பி சுந்தர், மதுபோதையில் தகராறு செய்த அண்ணனிடம் கத்தியை பறிக்க முயன்றுள்ளார். அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரிடம் கத்தியை பறிக்க சுந்தர் தீவிரமாக முயற்சித்தாராம். ஆனால் சுபாஷ் கத்தியை கொடுக்க மறுத்ததோடு, சுந்தருடன் தகராறு செய்தாராம். ஒரு கட்டத்தில் அண்ணன் கையில் இருந்த கத்தியை சுந்தர் வலுகட்டாயமாக பிடுங்க முயன்ற போது 2 பேரும் கீழே விழுந்திருக்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சுபாஷ் கையில் வைத்திருந்த கத்தி அவரது இடதுபுற மார்புக்கு கீழ் பகுதியில் ஆழமாக குத்தியதாக கூறப்டுகிறது
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீத சம்பவத்தை பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த புதுமாப்பிள்ளை சுபாஷை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது, இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். எனினும் திருத்தி அமைக்கப்பட்ட பி.என்.எஸ். 105 என்ற சட்டப்பிரிவின் கீழ் கொலை ஆகாத மரணம் விளைவித்தல் என்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்துள்ளனர். மதுபோதையில் இருந்த அண்ணனிடம் இருந்து கத்தியை வாங்கும் முயற்சியில் உயிர் பலி ஏற்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.