நாகர்கோவில் நவ 3
கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராம், மைலாடி, தென் தாமரைக்குளம், நாகர்கோவில், செட்டிகுளம், கோட்டார், கம்பளம், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், புத்தேரி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடியது இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு குடும்பத்துடன் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் சிரமமடைந்துள்ளனர். கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்தனர். பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர் இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.